வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

காதல் !!!


காதல்! இந்த மந்திர வார்த்தை உச்சரிக்கப்படாத உதடுகளே இல்லை.காதல் நுழையாத இதயங்களும் இல்லை.யாராயிருப்பினும் வாழ்நாளில் ஒருமுறையேனும் காதல்வசப்படாமல் இருக்கவே முடியாது.காதல் என்ற பெயரில் நாளாந்தம் நிறையத் தப்புகள் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன. அதையெல்லாம் விடுத்து ஆரோக்கியமான காதல் வாழ்விற்கு சில வழிமுறைகள்.(சொந்த அனுபவம் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ) நீங்கள் இன்னும் வாழ்நாள் பந்தத்தில் இணையாத ஜோடியாக இருக்கலாம், அல்லது அம்மி மிதித்து அட்சதை தூவி ஆசீர்வாதம் பெற்று இல்லறம் நடத்தும் ஜோடியாக இருக்கலாம்.எப்படியிருப்பினும் காதற்பயிர் தளைக்க சில குறிப்புகள்.

  1.  நம்பிக்கை காதலின் அடிப்படை. பரஸ்பரம் நம்பிக்கை கொண்டிருங்கள். இல்லாவிடில் காதலின் அஸ்திவாரமே ஆட்டம் காணத் தொடங்கிவிடும்.
  2.  புரிதல் இல்லாத வாழ்வு பிரிதலில் தான் போய் முடியும். புரிந்து கொள்ளுங்கள். உங்கள் துணையின் விருப்பு, வெறுப்புக்களைப் புரிந்து வைத்திருங்கள்.
  3. நடந்து முடிந்த விடயங்களையே திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிராதீர்கள். தவறு யார் செய்திருந்தாலும் நாளடைவில் மன்னித்து மறந்து விடுங்கள்.மறப்பது மனித குணம். மன்னிப்பது தெய்வகுணம் என்பார்கள். தெய்வமாக இருப்பதில் உங்களுக்கு உடன்பாடில்லாமல் போகுமா என்ன? மன்னிப்பு வழங்க ஒரு போதும் தயங்காதீர்கள்.
  4. உங்கள் துணையை ஒருபோதும் அடுத்தவர்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அது அவர்களைக் காயப்படுத்தும். மாறாக அவர்களிடம் இருக்கும் நற்பண்புகளை மெச்சுங்கள்.
  5. பாராட்டு வழங்கத் தயங்காதீர்கள். உங்கள் துணையிடம் இருக்கும் திறைமைகளைக் கண்டறிந்து பாராட்டுங்கள். ஊக்குவியுங்கள்.(எனக்கு மிகப் பொருந்தும்) உதாரணமாக சாப்பாட்டில் உப்பில்லை என்றால் உடனே எரிந்து விழுவீர்களே அதே போல சமையல் நன்றாயிருந்தால் உடனே பாராட்டுங்கள்.
  6. அவ்வப்போது சின்னச் சின்ன ஆச்சரியங்களை வழங்குங்கள். வாழ்த்து அட்டை, உங்கள் துணைக்குப் பிடித்த சில பொருட்களை பரிசாக வழங்குங்கள். விசேட நாட்களில் மட்டுமல்ல, உங்களால் முடிந்த போதெல்லாம்.
  7. செலவேயில்லாத சிக்கனமான பரிசு அன்பான வார்த்தைகள். அன்பை எப்போதும் வார்த்தைகளாக வெளிப்படுத்துங்கள்.
  8. நகைச்சுவை, விளையாட்டுப்பேச்சு எல்லாமே தேவை தான், ஆனால் உங்கள் துணையின் மனதைப் புண்படுத்தாதவாறு பேசுங்கள்.
  9. துணையிடம் எப்போதும் மரியாதை கொண்டிருங்கள். அவர்களின் தனிப்பட்ட சுதந்திரங்களில் அளவுக்கு மீறித் தலையிடாதீர்கள்.
  10. உங்கள் பாசத்தையும் அருகாமையையும் அவர்களுக்கு உணர்த்துங்கள். தேவைப்படும் பட்சத்தில் உதவி செய்யத் தயங்காதீர்கள்.
  11. முடியாத தருணங்களில் வாக்குறுதிகளை வழங்காதீர்கள், முடியாதென்பதற்கு காரணத்தை விளக்குங்கள். உறுதி வழங்கிவிட்டு செய்யாதிருப்பதை விட முடியாதேன்பதைச் சொல்லி விடுவதே மேல்.
  12. எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் துணையைக் காதலியுங்கள். காதலைக் காதலியுங்கள். காதலை வாழ வையுங்கள். காதல் உங்களையும் வாழ வைக்கும்.




1 கருத்து: