சொந்தமாய் ஒரு வீடு என்பது அநேகரின் கனவாக இருக்கின்றது. ஆனால் நான் வாழும் நாட்டில்(சுவிட்சர்லாந்து) நம் நாட்டைப் போல அது அவ்வளவு இலகுவானதல்ல என்பதோடு சொந்த வீடு என்பது இந்நாட்டவர்கள் பலராலேயே விரும்பப்படுவதில்லை. அவர்கள் இந்நாட்டின் சட்ட நுணுக்கங்களையும் நெளிவு சுளிவுகளையும் அறிந்து வைத்திருக்கின்றார்கள். சாதாரணமாக ஒரு வீடு வாங்க விரும்பினால் அந்த வீட்டின் பெறுமதியில் 20 சதவீதத்தை முதலிலேயே செலுத்தி மிகுதியைத் தவணை அடிப்படையில் செலுத்திக் கொள்ள வேண்டும். அவற்றைச் செலுத்தி முடியவே நீண்ட காலம் எடுக்கும் என்பதோடு செலுத்தி முடிந்த பின் நம் பெயரில் உள்ள ஒரு சொத்தாக அது மாறுவதனால் அதன் மீதான வரியையும் செலுத்த வேண்டி இருக்கும். அதனால் வீடு வாங்கும் இந்த நாட்டவர்கள் தவணைப்பணம் கட்டி முடியும் தருவாயில் அந்த வீட்டின் பெயரில் கடன் எடுத்து விடுகிறார்கள். எனவே முழுப்பணமும் செலுத்தி முடியும் வரையில் சொந்த வீடு என்று கூடச் சொல்லிக்கொள்ள முடியாத நிலை தான். நம்மவர்களிடையே கடந்த சில ஆண்டுகளாக வீடு வாங்கும் மோகம் அதிகரித்திருக்கின்றது. ஆசைப்படுவதில் தப்பில்லை. ஆனால் விடயங்களை முழுமையாக அறிந்துகொள்ளாமல் அவர் வாங்கினால் நானும் வாங்குவேன் என்றதொரு போட்டி மனப்பான்மையில் தான் நிறையப்பேர் வாங்குகின்றார்கள். இடையில் பணம் செலுத்த முடியாத நிலை வரும் போது நிறைய நட்டத்தையும் எதிர்கொள்ள வேண்டி வருகின்றது. அத்துடன் நாம் வாடகை வீட்டில் இருக்கும் போது வசதிப்படும் நேரத்தில் வேறு வீட்டிற்கு மாறிக்கொள்ளலாம். சொந்த வீடு எனும்போது அது அவ்வளவு இலகுவாக இருக்காது. எனவே எந்த விடயத்திலும் ஒரு தடவைக்குப் பத்துத் தடவை யோசித்து சரியான ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு முடிவெடுத்தல் என்பதே சரியாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக