மாறுபட்டிருத்தல், வேறுபட்டிருத்தல் அல்லது விதிவிலக்காய் இருத்தல் என்பது சுலபமான காரியமாகப் படவில்லை எனக்கு. மரபு வழி வந்த விடயங்களையும் காரணம் தெரியாமலே இன்னும் பின்பற்றிக் கொண்டிருக்கும் நடைமுறைகளையும் விட்டு வெளியே வருதல் என்பது இலகுவில் சாத்தியப்படாததொன்றாகவே நான் உட்பட நம்மில் பலருக்கும் இருக்கின்றது. இவற்றில் நம் முன்னோர்களால் வழி வழியாகக் கூறப்பட்டு வருகின்ற சில விடயங்கள் இன்றைய சூழலில் பொருந்தாது போகுமிடத்து அவர்களை அனுசரிக்க வேண்டும் என்பதற்காகவே விருப்பமின்றி நிறைய இடங்களில் தலையாட்ட வேண்டியும் இருக்கின்றது. பொழுது இருண்டு விட்டால் வீட்டை விட்டுப் பெண்கள் வெளியே போகக் கூடாதென்பது முன்னோர் வழக்கம். நாம் இப்போதிருக்கின்ற சூழலில் அதெல்லாம் பார்த்தால் முடியுமா? இரவோ பகலோ பெண்களும் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் இப்போது அநேகமானோருக்கு இருக்கின்றது.சரியோ தவறோ விரும்பியோ விரும்பாமலோ சொந்த ஊரையும் சொந்தங்களையும் விட்டு தூரம் வந்த பின்னர் இருக்கும் சூழலில் பொருந்தி வாழ வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கின்றது. ஊரிலிருக்கும் போது நம் கலாச்சாரப்படி அணிந்த உடைகளை ஐரோப்பாவின் குளிர் காலநிலையில் அணியமுடியுமா? இங்கிருக்கும் காலநிலைகேற்றவாறு தான் இங்கு உடை அணிய முடியும். என்னைக் கேட்டால் அந்தந்த இடத்தின் காலநிலைகளைப் பொறுத்துத் தான் கலாச்சாரமும் உடைகளும் அமைந்திருக்கின்றன என்று சொல்வேன். சமீபத்தில் நான் வாழும் நாட்டில் உறவினர் ஒருவரின் வீட்டு விசேடம் ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.அங்கே நான் சந்தித்த ஒரு இளம்பெண் என்னிடம் கேட்ட கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. ' அக்கா உங்களுக்குத் தெரியுமா? ஐரோப்பாவில் தமிழ்ப் பெற்றோருக்குக் குழந்தைகளாக நாங்கள் பிறந்து எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றோம் என்று? மேற்கத்தைய கலாச்சாரத்தையும் பின்பற்ற முடியாமல் நம்மவர் கலாச்சாரத்தையும் பின்பற்ற முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்புகளாய் நாங்கள் தவிப்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரிகிறது?' அவளின் கேள்வியில் இருந்த நியாயம் எனக்குப் புரிந்தது. அவர்கள் படிக்கும் இடங்களிலோ வேலைக்குப் போகும் இடங்களிலோ மேற்கத்தையக் கலாச்சாரத்தையும் நம்மவர் கூடுமிடங்களில் நம் கலாச்சாரத்தையும் பின்பற்றவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கின்றது. இல்லாதவிடத்து நாகரிகம் தெரியாதவர்கள் என்று இந்த நாட்டவர்களாலும் தறுதலைகள் என்று நம்மவர்களாலும் கேலிகளுக்கும் கண்டனங்களுக்கும் ஆளாகின்றார்கள் பிள்ளைகள்.எனவே அவர்களுக்குச் சரியான இடத்தில் சரியான அணுகுமுறைகளைக் கற்றுக் கொடுப்பதும், பிள்ளைகளைப் புரிந்துகொண்டு சரியாக வழிகாட்டுவதென்பதும் இங்குள்ள பெற்றோர்களின் கடமையாகவும் ஏன் ஒரு சவாலாகவும் கூட இருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக