இருண்டதோர் மழைப்பொழுதில் என் இதழ் தீண்டி,
உருகிக் கரைந்திட்டதோர் மழைமுத்திடம்,
நான் என்பதே மறந்து நீ மட்டுமாய்,
நிறைந்து நெகிழ்ந்திடும் என் நினைவுகளிடம்,
அருகே நீயிருப்பதாய் பாவித்து அலைபேசியில் உன் முகம் பார்த்து
அடிக்கடி பேசிக்கொள்ளும் என் பைத்தியக் கணங்களிடம்,
உனக்கொன்று என்றால் பதறித் துடித்து நான்,
உடனடியாய் சரணாகும் என் மாடத்து தெய்வங்களிடம்,
உன்னை உயர்விருத்தி என்னைப் புறக்கணிப்பதால்,
முறைத்து முகம் திருப்பும் என் இதயத்திடம்,
செல்லமாய் உன்னை முத்தமிடும் போது,
சிலிர்த்துக் கொள்ளும் என் வீட்டுச் சுவர்களிடம்,
அநேக இரவுகளில் என் அணைப்பிலேயே கிடந்து,
சில பொழுதுகளில் கண்ணோரம் கரிக்கும் உப்புநீரில்,
கன்னம் நனைந்துகொள்ளும் என் கரடி பொம்மையிடம்,
கேட்கப் பொழுதிருந்து பிரியமும் இருந்தால்,
கேட்டுப் பார் உன் மீதான என் பிரியத்தினை...




